செல்போன்களை செயற்கைக்கோள் போன்களாக மாற்றலாம்; சிக்னல் இல்லாத இடத்திலும் பேசலாம்

செல்போன்கள் நவீன வடிவம் பெறுவதுபோலவே, அதன் செயல்பாட்டு வேகமும் அதிரடியாக அதிகரிக்கப்போகிறது. நகரத்தை கடந்தால் பாதியாக குறைந்துவிடும் நெட்வொர்க் இணைப்புகள், காற்று வேகமாக அடித்தால் தொடர்பிழக்கும் இணைப்புகள் போன்ற பிரச்சினைகள் இனி இல்லை. மலைப்பிரதேசம், கடல்பயணங்களில் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் மாறப்போகிறது. ‘நெட்வொர்க்’ டவர் மூலம் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள்களின் வழியாக இணைப்பு கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது ஒரு கருவி.
ரஷியாவைச் சேர்ந்த ‘யாழினி’ செல்போன் நிறுவனம் இதற்காக ‘யாழினி பாயிண்ட்’ என்ற கருவியை வடிவமைத்துள்ளது. பெரிய செல்போன் அளவில் காணப்படும் இந்தக் கருவி எல்லா ஸ்மார்ட்போன்களையும் செயற்கைகோள் போன்களாக செயல்படச் செய்கிறது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இதற்கான அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் இந்த கருவி செயல்படத் தொடங்கிவிடும்.
இதற்கென தனியாக சிறிய செயற்கைகோளையும் இந்த நிறுவனம் விண்ணில் செலுத்தி உள்ளது. இதன்வழியே வினாடிக்கு 2 ஜி.பி. வேகத்தில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். இதுபோன்ற மற்றொரு கருவி அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.